ரோட்டோரம் இறைச்சி கழிவுகள் இறந்த மாட்டையும் வீசும் அவலம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி சாலை அருகில் இறந்த மாடுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நேற்று இறந்த மாட்டையும் வீசி சென்றுள்ளதால் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளார்.

அருப்புக்கோட்டை வழியாக செல்லும் மதுரை -- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு, எஸ்.பி.கே., கல்லூரி ரோடு சந்திப்பு அருகில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி மாணவர்கள் இந்த ரோடு வழியாக செல்வர். இந்த பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுவது உடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்று இந்த பகுதியில் இறந்த காளை மாட்டை யாரோ அங்கு வீசி சென்றுள்ளனர். இதனால், அந்த பகுதி முழுவதும், துர்நாற்றம் எடுப்பதுடன் அந்த பகுதியில் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.

நகராட்சி சுகாதார பிரிவினர் இறைச்சி கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இறந்த மாட்டையும் வீசி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளாதல் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Advertisement