அமெரிக்காவில் முடங்கியது டிக்டாக் செயலி; ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

6

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலி முடங்கியது. ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.



'டிக் டாக்' எனப்படும், மொபைல்போன் செயலி உலகளவில் பிரபலமானது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த செயலியில் பதிவாகும் தகவல்கள், சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு, அந்த செயலி மீது நடவடிக்கை எடுத்தது.



அந்நிறுவனத்தை அமெரிக்க உரிமையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தடையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனை ஏற்காத நிலையில், இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது.



இதை எதிர்த்து,டிக் டாக் செயலி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை, உச்சநீதிமன்றம் தடை செய்தது. இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


ஏற்கனவே பாதுகாப்பு காரணம் காட்டி, இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement