ம.பி., கவர்னர் கான்வாயை நெருங்கிய நபர்: அடித்து உதைத்த போலீசுக்கு எதிர்ப்பு
போபால்: ம.பி.,யில் கவர்னரின் கான்வாய் அருகே நின்ற நபரை போலீஸ் ஒருவர் சராமரியாக அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ம.பி., மாநிலம் போபாலின் ஆனந்த் நகர் பகுதியில், கவர்னரின் கான்வாய் சென்று கொண்டிருந்த போது, ஒருவர் நெருங்கி வந்தார். இதனை பார்த்து கோபம் அடைந்த போக்குவரத்து போலீசார், அவரை எந்த எச்சரிக்கையும் செய்யாமல், பொது மக்கள் மத்தியில் சராமரியாக அடித்து உதைத்தார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சாமானிய மனிதரை பொது வெளியில் போலீசார் இப்படித்தான் நடத்துவார்களா என்ற கேள்வி எழுப்புகின்றனர்.
பாதுகாப்பு வழங்குவர்களே இப்படி தாக்குவது எப்படி சரி?உண்மையிலேயே அவரால் ஆபத்து உள்ளதா?சாலையை கடக்க கான்வாய் செல்லும் வரைநின்றுள்ளார். அங்கு வேறு சிலரும்உள்ள போது, இவரை மட்டும் தாக்குவது ஏன்?பாதுகாப்பு தான் முக்கியம் என்றால், அந்த வழியில் மக்களை அனுமதித்தது ஏன்? என கேள்விகளை எழுப்ப துவங்கினர்.
இது தொடர்பாக கூடுதல் துணை கமிஷனர் விக்ரம் ரகுவன்ஷி கூறியதாவது: கவர்னர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார். அவரது கான்வாய் சென்ற போது, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி அந்த நபர் அருகே சென்று நின்றார். அவர் அருகே சென்றதற்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. துணை கமிஷனர் மட்டத்திலான அதிகாரி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, வாக்குமூலத்தை பதிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.