ஈரோடு இடைத்தேர்தல் வேண்டாத வேலை: சொல்கிறார் அண்ணாமலை
மதுரை: 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம். 9 மாதத்திற்கு எம்.எல்.ஏ., தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை தமிழக அமைச்சர்கள் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளோம் என்பது குறித்து லோக்சபா தேர்தலின் போது 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தோம். 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.தி.மு.க.,வின் அமைச்சர்கள் காதையும், கண்ணையும் திறந்து, இந்திய அரசியலில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் இருக்கிறது. அதிலும் தமிழகத்திற்கு பெரிய அளவில் திட்டங்கள், நிதி வரும். இவர்கள் ஆட்சியின் லட்சணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக, தினமும் மத்திய அரசு மீது குறை சொல்வதை முழு நேர வேலையாக தி.மு.க., அரசு வைத்துள்ளது, என்றார்.
ஆட்சி மாறுமா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இந்த ஒரு தேர்தல் காரணமாக ஆட்சி மாறுகிறதா? இந்தியாவில் இது போன்ற தேர்தல் நடக்காது. 5 வருடத்தில் ஒரு தொகுதியில் மக்கள் 4 முறை ஓட்டு போட்டால் ஜனநாயகத்திற்கு மீது அவர்களுக்கு மரியாதை வருமா? ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை நிற்க வைத்து ஓட்டு கேட்பீர்கள். மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். இப்போது வரும் எம்.எல்.ஏ., 9 மாதம் தான் இருப்பார். இந்த முறை எத்தனை சதவீத மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்று பாருங்கள்.
வேண்டாத வேலை
ஜனநாயகத்தின் மீது வெறுப்பு தான் வரும். நியாய படி இது போன்ற தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்த கூடாது. இடைத்தேர்தல் நடத்தலாம். இடைத்தேர்தலுக்கு இடை தேர்தலா? மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். நாங்கள் போட்டியிட்டால் நேர்மையாக தேர்தல் நடத்துவார்களா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம். 9 மாதத்திற்கு எம்.எல்.ஏ., தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?
முதல்வருக்கு பயம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி., சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கவர்னர் மீதான பயத்தால் ஸ்டாலின் பிதற்றுகிறார். தமிழக அரசின் மீதுள்ள வெறுப்பை மறைக்க கவர்னரை பகடைக்காயாக தி.மு.க., பயன்படுத்துகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.