விண்வெளி துறையில் இந்தியா அபார வளர்ச்சி: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
புதுடில்லி: 'விண்வெளி துறையில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது' என 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
ரேடியோ வாயிலாக பிரதமரின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி கடந்த 2014ம் ஆண்டு அக்.03ம் தேதி துவக்கப்பட்டது. ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசுத்தினம் என்பதால், இன்று (ஜன.,19) ஒத்திவைக்கப்பட்டது. அதன் படி, 2025ம் ஆண்டின் முதல் மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில், இன்று பிரதமர் மோடி பேசியதாவது:
நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருப்பீர்கள். ஒவ்வொரு மாதமும் 4வது ஞாயிற்றுக்கிழமை தான் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவேன். இந்த முறை 3வது ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகிறேன். இதற்கு காரணம் அடுத்த வாரம் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுவது தான். நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். இஸ்ரோ விஞ்ஞானிகள் வியத்தகு சாதனைகளை செய்து வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்கால சவால்களுக்கு இந்திய விஞ்ஞானிகள் தீர்வுகளை வழங்குவார்கள். விண்வெளி துறையில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது.
தொலைநோக்குப் பார்வை
நமது விஞ்ஞானிகள் விண்வெளியில் தாவரங்களை வளர்த்து அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். டிசம்பர் 30ம் தேதி அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்ட, இந்த விதைகள் விண்வெளியில் முளைத்துள்ளன. எதிர்காலத்தில் விண்வெளியில் காய்கறிகளை வளர்ப்பதற்கான வழிகளை உருவாக்கும். நமது விஞ்ஞானிகள் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறார்கள்.
பொன்னான எதிர்காலம்
மஹா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இது நமது பாரம்பரியத்தை வலுப்படுத்தும். பொன்னான எதிர்காலத்தை உறுதி செய்யும். இது வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் கும்பமேளா நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுகிறார்கள்.
பாரம்பரியம்
ஏழையோ பணக்காரனோ அனைவரும் ஒன்றுதான். அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இது தெற்கிலிருந்து வடக்கு வரை ஒன்றிணைகிறது. சங்கராந்தி அன்று உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். வளர்ச்சிப் பாதையில் செல்லும் போது நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை நமக்குக் கொடுத்த எல்லாப் பெரிய மனிதர்களையும் நினைவு கூர்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.