ஆவடி இரட்டைக்கொலை: தடுக்கத்தவறிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

சென்னை; ஆவடியில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.



பட்டாபிராம் மயில்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு ரெட்டைமலை சீனிவாசன் (27), ஸ்டாலின்(24) என்ற இரு மகன்கள் உள்ளனர். அதில் ரெட்டைமலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரது சகோதரர் ஸ்டாலின் ரவுடிகள் பட்டியில் இடம்பெற்றவர்.


சரித்திர பதிவேடு ரவுடிகளான இவர்கள் இருவரும் நேற்று (ஜன.18) இருவேறு இடங்களில் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஸ்டாலின் ஆயில்சேரியிலும், ரெட்டைமலை சீனிவாசன் ஆவடியிலும் தனித்தனியாக கொல்லப்பட்டனர்.


தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்த படுகொலை நடைபெற்றதும், சகோதரர்கள் இருவரும் தப்பிக்க தனித்தனியே ஓடியபோது விடாமல் துரத்தி வந்த கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ததும் தெரிய வந்தது.


கொல்லப்பட்ட இருவரின் அண்ணன் கக்கன் என்பவர் 2017ம் ஆண்டு பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் என்ற பகுதியில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். சகோதரர்கள் இரட்டைக் கொலையை தொடர்ந்து, துணை கமிஷனர் ஐமன் ஜமால் சம்பவ பகுதிக்குச் சென்று நேரில் சென்று பார்வையிட்டார். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


இந் நிலையில் குற்றச் செயலை தடுக்க தவறியதாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக திருவேற்காடு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா விஜயராஜ் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Advertisement