ஐ.டி., ஊழியரிடம் துணிகர மோசடி; ரூ.11 கோடி பறித்த சைபர் குற்றவாளிகள் கைது!

10

பெங்களூரு: போலீஸ், சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறி, பெங்களூரு ஐ.டி., ஊழியரை மிரட்டிய கும்பல், ரூ.11 கோடியை பறித்தனர். அவர்களில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் விஜய்குமார் என்ற பொறியாளர் வேலை பார்த்து வருகிறார். இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்த 50 லட்சம் ரூபாய், பல்கிப்பெருகி, 12 கோடி ரூபாயாக வளர்ச்சி பெற்றிருந்தது.

இந்நிலையில், போலீஸ், சுங்கத்துறை மற்றும் அமலாக்க இயக்குநரகத்தில் இருந்து பேசுவதாக கூறி அடுத்தடுத்து போன் அழைப்புகள் வந்தன. அதில், 'நீங்கள் பண மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என்றும், 'உங்களுடைய ஆதார், பான் கார்டு, கே.ஒய்.சி., தகவல்கள் வேண்டும்' என்றும் மிரட்டினர்.
அவர்களது உருட்டல் மிரட்டல்களில் பயந்துபோன விஜயகுமார், அவர்கள் கேட்கும் தகவல்களை எல்லாம் கொடுத்தார்.
இந்நிலையில், அவரது சந்தை முதலீட்டுப்பணத்தை, கொஞ்சம் கொஞ்சமாக அந்த நபர்கள், வேறு வங்கி கணக்குகளுக்கு எடுக்கத் தொடங்கினர். 'உங்கள் பெயரை, குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க வேண்டுமானால், நாங்கள் சொல்வதை கேளுங்கள்' என்று கூறியுள்ளனர்.
அதைக்கேட்டு விஜய்குமார் அமைதியாக இருந்தார். இப்படியே அந்த நபர்கள், பல மாதங்களாக, 11 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு விட்டனர்.
இந்நிலையில் தான் மோசடியாளர்களால் ஏமாற்றப்படுவதாக சந்தேகம் கொண்ட விஜய்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார், அவர் ஏமாற்றப்பட்டதை உறுதி செய்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், மோசடியாளர்கள் எடுத்த பணத்தில், ஏழரை கோடி ரூபாயை அலகாபாத்தில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு அனுப்பியது கண்டறியப்பட்டது.
தொடர் விசாரணையில் சூரத் நகரில் மோசடிப்பேர்வழிகள் இருப்பது தெரியவந்தது. தருண் நடானி, கரண், தவால் ஷா ஆகியோர் சூரத்தில் கைது செய்யப்பட்டனர். மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி, தங்கம் வாங்கியதும், அதை வேறு ஒருவருக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement