ராமர் பஜனை பாடிய இத்தாலிய குழுவினர்!
லக்னோ: இத்தாலியை சேர்ந்த தியானம் மற்றும் யோகா மைய நிறுவனர் மஹி குருஜி தனது ஆதரவாளர்களுடன் இன்று லக்னோவில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது.
மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை தொடர்ந்து நடந்து வருகிறது. மஹா கும்பமேளாவில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதற்கு மத்தியில்,உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இத்தாலியில் தியானம் மற்றும் யோகா மையம் நடத்தும் மஹி குருஜியுடன் வந்த குழுவினரை சந்தித்து பேசினார்.
பிரயாகராஜில் நடைபெறும் கும்பமேளாவிற்கு சென்று விட்டு திரும்பிய இத்தாலிய பெண்கள் குழுவினர், முதல்வர் ஆதித்யநாத் முன்னிலையில் ராமாயணம், சிவ தாண்டவம் மற்றும் பல பஜனை பாடல் பாடினர்.
உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விபரப்படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி 17 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் மஹா கும்பமேளாவில் பங்கேற்றனர்.
இன்று அதிகாலை, அடர்ந்த மூடுபனிக்கு மத்தியிலும் பக்தர்கள் மஹா கும்பமேளாவில் நீராடினர். மோசமான வானிலை யாத்ரீகர்களின் வருகையைப் பாதிக்கவில்லை.
ஜனவரி 18ம் தேதி நிலவரப்படி, சங்கம் திரிவேணியில் 7.72 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் புனித நீராடினர். வரும் நாட்களில் யாத்ரீகர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.