உரிய காலக்கெடுக்குள் தேர்தல்: வங்கதேச தேர்தல் ஆணையம் உறுதி

2

டாக்கா: இடைக்கால அரசு நிர்ணயித்த காலக்கெடுவில் பொதுத் தேர்தல் நடத்துவோம் என்று வங்கதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. மீண்டும் தேர்தல் நடத்துவதாக உறுதி அளித்துள்ளது.

அதற்கு வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (யு.என்.டி.எப்) வாயிலாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று டாக்காவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதின் கலந்துகொண்டார்.

தேர்தல் எப்போது நடக்கும் என்பது பற்றி நசீர் உதின் கூறியதாவது:

தேர்தல் ஆணையம், யு.என்.டி.எப் இடமிருந்து புள்ளி விபரங்கள் சேகரிப்புக்காக 175 மடிக்கணினிகள், 200 ஸ்கேனர்கள் மற்றும் 4,300 பைகளைப் பெற்றது. தலைமை ஆலோசகர் அறிவித்த காலக்கெடுவில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதை நோக்கிச் செயல்படுகிறோம். உரிய காலக்கெடுவுக்குள் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.

பொதுத் தேர்தல் 2025ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ம் ஆண்டின் முதல் பாதியிலோ நடைபெறலாம் என்று கூறியிருந்தேன். தேர்தல் ஆணையம் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புக்கு ஆறு மாதங்கள் தேவைப்படும்.
சட்டம், விதிகள் மற்றும் அமைப்பை நாங்கள் பின்பற்றுவோம்.

மக்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல்களை எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு நசீர் உதீன் கூறினார்.

Advertisement