அவசர கால நிதியாக கிரெடிட் கார்டை பயன்படுத்துவது ஏற்றதா?

எதிர்பாராத நிதி நெருக்கடி யாருக்கு வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இத்தகைய நெருக்கடி நேரங்களில், அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க அவசரகால நிதி கைகொடுக்கிறது. எனவே தான், அவசரகால நிதியை உருவாக்கி பராமரித்து வருவது அவசியம் என, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.


ஒரு சிலர், கிரெடிட் கார்டை அவசரகால நிதியாக பயன்படுத்த முற்படலாம். இது ஏற்ற உத்தியாக தோன்றினாலும், அவசரகால நிதிக்கான மாற்றாக அமையாது என்பதோடு பல்வேறு இடர்களையும் கொண்டுள்ளது.

கார்டு உதவி:



நிதி நெருக்கடி ஏற்படும் போது, தேவையான பணத்திற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். கார்டு வரம்பிற்கு ஏற்ற தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆக, அவசர தேவையை சமாளிக்க கிரெடிட் கார்டு உதவினாலும், இந்த தொகையை உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என்பதை, மனதில் கொள்ள வேண்டும்.

அதிக வட்டி:



கிரெடிட் கார்டு தொகையை செலுத்த வேண்டிய நேரத்தில் அதற்குரிய பணம் கையில் இல்லை என்றால் என்ன செய்வது? இந்த தொகையை மாத தவணைகளில் செலுத்தலாம் என்றாலும், இதற்கான வட்டி விகிதம் அதிகம். கிரெடிட் கார்டு கடன் என்பது அதிக செலவிலான கடன் என்பதை மறந்துவிடக்கூடாது.

கடன் சுமை:



கிரெடிட் கார்டு கடனை அடைக்க தனிநபர் கடன் வசதியை நாடலாம் என்றாலும், இதுவும் அதிக வட்டி விகிதம் கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இது கடன் சுமையாக அமையும். கடன் சுமையை சரியாக நிர்வகிக்க முடியாவிட்டால் சிக்கலாக வளர்ந்து பாதிப்பை உண்டாக்கலாம்.

இடர் அம்சம்:



கிரெடிட் கார்டு கடன் வரம்புகள் எந்த நிலையிலும் மாறலாம். வங்கிகள் திடீரென கடன் வரம்பை குறைக்கலாம். சில நேரங்களில் கார்டை மூடிவிடும் நிலையும் கூட ஏற்படலாம். எனவே, கிரெடிட் கார்டை அவசரகால நிதிக்கு மாற்றாக

கொள்வது, மிகவும் பிழையானது.

நிதியின் தேவை:



இதனால், அவசரகால நிதி தனியே இருப்பது மிகவும் அவசியம். தேவை எனில், கிரெடிட் கார்டு கொண்டு முதலில் பணம் செலுத்திவிட்டு பின்னர் அவசரகால நிதி கொண்டு அடைத்துக்
கொள்ளலாம். ஆனால் அத்தகையநிதி கைவசம் இருக்க வேண்டும்.

Advertisement