இஸ்ரோவின் சமீபத்திய சாதனை: புதிய அத்தியாயத்தின் துவக்கம்!
விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் மிகப்பெரிய பணியை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், சமீபத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. ஏற்கனவே பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இஸ்ரோவின் பணியில், இது, மற்றொரு மைல் கல். அத்துடன், இந்த சாதனையை ஏற்கனவே நிகழ்த்தியுள்ள அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்த, நான்காவது நாடு என்ற பெருமையும், இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
தற்போதைய நிலையில், பல நாடுகளின் எதிர்கால விண்வெளி ஆய்வுகளானது, செயற்கைக் கோள்களை இணைக்கும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாகவே உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டால் மட்டுமே, விண்வெளியில் ஆய்வு மையம் அமைப்பது, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது, அடுத்தடுத்த கிரகங்களை ஆய்வு செய்வது போன்றவற்றில் சாதனை படைக்க முடியும். குறிப்பாக, சந்திரயான் - 4 திட்டத்திற்கும் இந்த தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரத்தில், தலா, 220 கிலோ எடையுள்ள, 'சேசர் மற்றும் டார்க்கெட்' என்ற இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சியானது, கடந்த மாதம், 30ம் தேதி துவங்கியது. ஆனாலும், தொழில்நுட்ப ரீதியான காரணங்களால், இணைப்பு முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த, 16ம் தேதி மீண்டும் ஒரு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டு, செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டு விட்டன.
இதன்வாயிலாக, இணைப்பில் இருந்த பிரச்னை கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இரு செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டதன் வாயிலாக, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மின்சாரத்தை பரிமாறிக்கொள்ள முடியும். அத்துடன், அவை இரண்டும் தங்களுக்கான பணிகளை, அடுத்த இரு ஆண்டுகளுக்கு சிறப்பாக செய்யவும் முடியும்.
விண்வெளி ஆய்வில், கடந்த சில ஆண்டுகளாகவே, இஸ்ரோ முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. எனவே, அந்த நிறுவனத்தின் வெற்றி மற்றும் சாதனை என்பது எல்லாரும் எதிர்பார்க்கும் ஒன்றாகவே உள்ளது. இஸ்ரோவின் தோல்விகள் மட்டுமே எதிர்பாராதவை.
இந்த விண்வெளி தொழில்நுட்பம் போல, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் அமைப்புகள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எரிசக்தி போன்றவை, வரும் காலங்களில் ஒரு நாட்டின் தலைவிதியையும், மக்களின் நல்வாழ்வையும் தீர்மானிக்கக்கூடிய தொழில் நுட்பங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த தொழில்நுட்ப களங்களில் முன்னணியில் இருக்கும் நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு, அவற்றை விஞ்சும் அளவுக்கு, நம் நாட்டில் செயல்படும் நிறுவனங்களும், வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்த முன்வர வேண்டும். அப்போது, நம் நாட்டின் பெருமை இன்னும் மேலோங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்ரோ நிறுவனம் மற்றும் அணுசக்தி துறையினர், தங்கள் திட்டங்களையும், ஆட்கள் சேர்ப்பு மற்றும் செலவினங்களையும் தீர்மானிப்பதில், சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவே விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில், இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதற்கும், வெற்றி கண்டுள்ளதற்கும் காரணம் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அத்துடன், நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகள் சமூகம் எடுக்கும் முடிவுகளை அங்கீகரிப்பதுடன், ஆதரவு அளித்தும் வருகின்றனர். இதுவும், விஞ்ஞானிகளின் சாதனை தொடர்வதற்கு முக்கிய காரணம். இந்த நிலைமை தொடர வேண்டும். இதேபோல, வளர்ந்து வரும் மற்ற தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள இடைவெளியை போக்க, இஸ்ரோ மற்றும் அணுசக்தி துறையில் பின்பற்றுவது போன்ற அணுகுமுறையை பின்பற்ற, மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
வரும் காலங்களில், மனித குலத்தின் பல முன்னேற்றங்கள், விண்வெளி ஆய்வுடன் தொடர்புடையதாக இருக்கும். இதுதொடர்பான போட்டியில், இஸ்ரோவும் முக்கிய பங்காற்றும் அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், இஸ்ரோவின் சமீபத்திய சாதனை, புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்.