வாகன சந்தையில் வியட்நாம் நிறுவனம் வின்பாஸ்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுடில்லி:வியட்நாமை சேர்ந்த 'வின்பாஸ்ட்' நிறுவனம், அதிகாரபூர்வமாக இந்திய வாகன சந்தைக்குள் நுழைந்துள்ளது.

டில்லியில் நடந்து வரும், வாகன கண்காட்சியில், இந்நிறுவனம் ஏழு மின்சார கார்களை காட்சிப்படுத்தியதுடன், இரண்டு கார்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 'வி.எப்., - 6 மற்றும் வி.எப்., - 7' என, இரு எஸ்.யூ.வி., மின்சார கார்கள் அறிமுகமாக உள்ளன.

வி.எப்., - 6



இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த கார் அறிமுகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில், 59.60 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதன் ரேஞ்ச், 400 கி.மீ., ஆகும். அடாஸ் பாதுகாப்பு வசதி, 13 அங்குல டச் ஸ்கிரீன், அதிக உட்புற இடம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். டாடா கர்வ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி இ - விட்டாரா கார்களுக்கு போட்டியாக உள்ளது.

வி.எப்., - 7



உள்நாட்டில் அறிமுகமாகும் முதல் வின்பாஸ்ட் நிறுவன கார் இது. இந்த காரில், 75 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதன் ரேஞ்ச் 430 முதல் 450 கி.மீ., வரை ஆகும். பி.ஒய்.டி., அட்டோ 3, மஹிந்திரா எக்ஸ்.இ.வி., - 9இ ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.

இரு கார்களும், துாத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. முதற்கட்ட முதலீடாக, 4,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மின்சார வாகன சந்தையில், 2017ல் அறிமுகமான இந்நிறுவனம், உலக அளவில், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இதர ஆசிய நாடுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

Advertisement