காத்திருக்கும், 'பம்பர்' பரிசு!

'கடவுளே... இதெல்லாம் நிஜம் தானா; நம்பலாமா...' என, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர், டில்லியில் உள்ள பெண்கள்.

இங்கு, முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம், 5ல் சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., என, மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க, பா.ஜ.,வும் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரத்திலும் அனல் பறக்கிறது.

இங்கு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 1.50 கோடி. இதில், பெண் களின் எண்ணிக்கை மட்டும், 72 லட்சம். இந்த, 72 லட்சம் பெண்களின் ஓட்டுகளை குறிவைத்துத் தான் மூன்று கட்சிகளும் வாக்குறுதிகளை அறிவித்துள்ளன.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும், 2,500 ரூபாய் உதவித் தொகையாக வழங்குவோம்...' என, பா.ஜ., அறிவித்துள்ளது. ஆம் ஆத்மியும், 2,100 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. பதிலுக்கு காங்கிரசும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு, 2,500 ரூபாய் வழங்குவோம்...' என அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், 'பெண்களின் ஓட்டுகளை வளைக்க வேண்டுமானால், நாம் இன்னும் அதிகப்படியாக எதையாவது அறிவிக்க வேண்டும்; என்ன செய்யலாம்...' என, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

டில்லியில் வசிக்கும் பெண்களோ, 'அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், நமக்கு பம்பர் பரிசு காத்திருக்கு...' என, சந்தோஷப்படுகின்றனர்.

Advertisement