மழையையும் பொருட்படுத்தாமல் திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று வார விடுமுறை ஞாயிறு, சஷ்டி மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேர்வீதியில் குவிந்தனர். நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் காலை, 10:30 மணி வரை தொடர்ந்து திருத்தணியில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் பொது தரிசனத்தில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர்.

அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

முன்னதாக, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், காலை முதல் மதியம் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கோவில் பேருந்து தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.


இதனால் பெரும்பாலான பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்றும், சில பக்தர்கள் ஆட்டோக்கள் மூலம் சென்றனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிப்படுவர். இதற்காக கோவில் நிர்வாகம், சரவணபொய்கை திருக்குளத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைத்துள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரை திருத்தணி பகுதியில் பலத்த மழை பெய்தது. ராஜகோபுரத்தின் இணைப்பு பணிகள் கட்டுவதற்காக கோவில் நிர்வாகம் செம்மண்ணால் சமன் செய்யப்பட்டிருந்தது.


பலத்த மழையால் செம்மண் மழைநீருடன் கலந்து படியில் வந்தது. எனவே கோவில் நிர்வாகம் படியில் இருக்கும் செம்மண்ணை அகற்ற வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

Advertisement