உங்கள் முதலீடு உத்தியில் தேவையான மாற்றங்கள் என்ன?

நிலையான வருமானம் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யும் போது, அவற்றுக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுவது அவசியம்.

வட்டி விகித சுழற்சி போக்கில், இந்த ஆண்டு வட்டி விகிதம் குறைய துவங்கும் என்பதால், வைப்புநிதி உள்ளிட்ட நிலையான வருமானம் தரும் முதலீடு வாய்ப்புகள் அதிக கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக, பல முதலீட்டாளர்கள் நிலையான வருமான முதலீடுகளை நாடும் வாய்ப்புள்ளது. முதலீடு தொகுப்பில், நிலையான வருமான முதலீடுகள் இருப்பது ஏற்றதாக கருதப்படுகிறது.

எனவே, நிலையான வருமானம் தரும் வாய்ப்புகளில் முதலீடு செய்ய விரும்புவோர் அதற்கேற்ற உத்திகளை கொண்டிருக்க வேண்டும்.

வட்டி விகித போக்கு



வட்டி விகித சூழலை பொறுத்தவரை, வட்டி விகிதம் உச்சத்தை தொட்டுவிட்டதாக கருதலாம். ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பை அறிவிக்கும் என, கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது.

வட்டி விகித குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி பல்வேறு காரணங்களால் தள்ளிப்போட்டு வந்தாலும், வரும் மாதங்களில் வட்டி விகிதம் குறையும் என்றே வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். பல்வேறு கட்டங்களில் 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதம் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

எனினும், இந்த குறைப்பு உடனடியாக அல்லாமல் மெல்ல நிகழலாம். எனவே, வைப்பு நிதி மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறையலாம்.

இந்த பின்னணியில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் தற்போதைய வட்டி விகிதத்தில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். முதலீட்டிற்கான கால அளவை நிதி இலக்குகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.

வர்த்தக வைப்பு நிதி வாய்ப்புகளையும் பரிசீலிக்கலாம். வர்த்தக வைப்பு நிதிகளை நாடும் போது இடர் அம்சத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அதிக ரேட்டிங் கொண்ட வாய்ப்புகளை நாட வேண்டும்.

சிறுசேமிப்பு திட்டங்கள்



மூத்த குடிமக்களை பொறுத்தவரை, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் அதிக பலன் தரக்கூடியதாக இருக்கும். ஐந்தாண்டு லாக் இன் வரம்பு கொண்ட இந்த திட்டத்தில், அதிகபட்சமாக 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதம் மற்றும் வரிச்சலுகை போன்ற அம்சங்களால் ஈர்ப்புடையவையாக அமைகின்றன. தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது மாதாந்திர வருமான திட்டம் ஆகியவை, 7 சதவீதத்திற்கு மேல் வட்டி அளிக்கின்றன. பத்திரங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர்.

வட்டி விகிதம் குறைய துவங்கும் வாய்ப்பு உள்ளதால், மாறும் வட்டி விகித பத்திரங்கள் ஏற்றதாக இருக்காது என கருதப்படுகிறது. இவை, ஏழு ஆண்டு கால முதிர்வு கொண்டவை. அரசு தரும் பாதுகாப்பை விரும்புவோர் தங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப இந்த பத்திரங்களை பரிசீலிக்கலாம்.

நிலையான வருமானம் தரும் முதலீடு வாய்ப்புகளை நாடும் போது, பாதுகாப்பு, பணமாக்கல் தன்மை மற்றும் வருமானம் ஆகிய மூன்று அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அம்சங்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் முதலீட்டில் விரிவாக்கமும் இருக்க வேண்டும்.

Advertisement