வானுார் மினி டைடல் பார்க் கட்டடத்தில் ஐ.டி., நிறுவனங்கள் தொழில் துவங்க வருமா?
வானுார்:விழுப்புரம் மாவட்ட எல்லையான வானுார் பகுதியில் திறக்கப்பட்ட மினி டைடல் பார்க் கட்டடத்தில், மூன்று ஐ.டி., நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ளன. எஞ்சியுள்ள இடங்களுக்கும் ஐ.டி., நிறுவனங்கள் தொழில் துவங்க முன் வரவேண்டும் என்பது படித்த இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசு, மாநிலம் முழுதும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், சென்னை தரமணியில் இருப்பது போன்று, சிறிய நகரங்களில் டைடல் பார்க் கட்டடம் கட்டி வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் வானுாரை அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் 31 ரூபாய் கோடி மதிப்பீட்டில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரடி பரப்பளவில், மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தில், 500 பேர் பணியாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை கடந்த ஆண்டு பிப்., 17ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார். இங்கு, மூன்று நிறுவனங்கள் மட்டுமே தொழில் துவங்கியுள்ளன. இதில், மொத்தம் 100 பேர் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த டைடல் பார்க் துவங்கப்பட்டு, பதினோறு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், ஒன்பது நிறுவனங்கள் செயல்படக்கூடிய இந்த கட்டடத்தில், மூன்று நிறுவனங்கள் மட்டுமே தொழில் துவங்கியுள்ளன. எஞ்சியுள்ள இடங்கள் தொழில் துவங்காமல் காற்று வாங்கி வருகின்றன.
விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் அதிகளவில் படித்த இளைஞர்கள் இருந்தும், அவர்களுக்கு வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் தான் டைடல் பார்க் அமைந்துள்ளது.
இதனால், இங்கு தொழில் துவங்கினால் வளர்ச்சிக்கு வாய்ப்பாக இருக்கும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் சுலபமாக இருக்கும்.