அத்திக்கடவு திட்ட குழாயில் உடைப்பு
அவிநாசி ; அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து வெளியேறும் தண்ணீரால், குட்டை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு, குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் பணிகள் நடக்கிறது. இத்திட்டத்தில் கிராமங்களில் செல்லும் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறுவது, நீர் கசிவு போன்றவைஏற்பட்டு வருகிறது. இதனால், தண்ணீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. அதுமட்டுமின்றி, அருகே உள்ள வயல் உட்பட விளை நிலத்தில், தண்ணீர் சூழ்ந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இச்சூழலில், அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் அருகே காரக்குட்டை நஞ்சைத் தாமரைகுளம் அருகில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த, நான்கு நாட்களாக தண்ணீர் பெருக்கெடுத்து சென்று வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் அருகே உள்ள குட்டைக்குள் சென்று வருகிறது. ஏற்கனவே, கடந்த, மூன்று மாதங்களுக்கு முன்பே குட்டை நிறைந்து விட்ட நிலையில், தற்போது செல்லும் கூடுதல் நீரால் குட்டை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குட்டை உடைந்தால், சுற்றியுள்ள, ஐந்தாறு கிராமங்களுக்குள் தண்ணீர் செல்லும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வருவாய்த் துறையினர் என, அனைவருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால், 20ம் தேதி (இன்று) தான் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என, பதில் கூறி சென்று விட்டதாக, கிராம மக்கள் குற்றம்சாட்டினர். எனவே, இதுபோன்று குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும். இல்லையென்றால், திட்டத்தின் நோக்கமே முழுமையாக சிதையும் நிலை ஏற்படும்.