எதிர்கட்சிகளுக்கு தோல்வி பயம் அமைச்சர் பொன்முடி கிண்டல்
விழுப்புரம் : 'ஈரோடு இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால், எதிர்கட்சிகள் ஒதுங்கி விட்டன'' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் முதல்வர் விழா முன்னேற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் முதல்வர் ஸ்டாலின், 27 மற்றும் 28ம் தேதி ஆகிய இரு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 27ம் தேதி திண்டிவனத்தில் கட்சி நிகழ்ச்சியும், 28ம் தேதி விழுப்புரத்தில் அரசு விழாவும் நடக்கிறது.
ஈரோடு இடைத் தேர்தலில், தோல்வி பயத்தாலும், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் இருப்பதை அறிந்தே எதிர்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிவிட்டன. அ.தி.மு.க., பா.ஜ., என அனைத்து கட்சிகளும் போட்டியிட தயங்கும் நோக்கமே, அங்கு தி.மு.க., மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதால் தான்.
அங்கு தற்போது எதிர்த்து நிற்பவர், பெரியாரை பற்றியே விமர்சனம் செய்துவிட்டு, பா.ஜ.,வின் அடியாளாக இருந்து, அந்த தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவதால், அவருக்கு டெபாசிட் கிடைக்காது. தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.