திட்டமிடலின்றி புதிய மின்கம்பங்கள் அணை ரோடு விரிவாக்கத்திற்கு சிக்கல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கொடிக்குளத்தில் இருந்து பிளவக்கல் பெரியாறு அணை வரை சரியான திட்டமிடுதலின்றி புதிதாக நடப்பட்ட மின்கம்பங்களால் எதிர்காலத்தில் பிளவக்கல் பெரியாறு அணை ரோடு விரிவாக்கத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கொடிக்குளத்தில் இருந்து கிழவன் கோவில், பட்டுபூச்சி வழியாக பெரியாறு அணை வரை ரோட்டின் இருபுறமும் விவசாய நிலங்களை ஒட்டி பழைய மின்கம்பங்கள் உள்ளது.

இந்நிலையில் தற்போது தார் ரோட்டை ஒட்டியே புதிய உயரமான மின்கம்பங்கள் நடப்பட்டு மின் ஒயர்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

ஏற்கனவே உள்ள பழைய மின்கம்பங்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் நடாமல், சரியான திட்டமிடுதலின்றி மாநில நெடுஞ்சாலை ரோட்டை ஒட்டி நட்டுள்ளது. எதிர்காலத்தில் ரோடு விரிவாக்கம் செய்யும்போது மீண்டும் மின்கம்பங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் நிலை உள்ளது.

தற்போது பெரியாறு அணை பூங்காவை சீரமைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வாகன போக்குவரத்து அதிகரித்து ரோடு விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய மின்கம்பங்கள் நடும்போது எதிர்கால ரோடு விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மின்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் புதிய கம்பங்கள் நடுவதற்கு சரியான திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும்.

Advertisement