திருச்செந்துார் முருகன் கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம்
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுக்கு இரண்டு வருடாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஆனி வருடாபிஷேகமும், தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் தை உத்திர வருடாபிஷேகமும் நடக்கும்.
அதன்படி, தை உத்திர வருடாபிஷேக விழா, நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னிதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின், பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு, காலை 8:15 மணிக்கு மூலவர், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சண்முகர் விமான கலசத்திற்கும், பெருமாள் விமான கலசத்திற்கும் வருடாபிஷேகம் நடந்தது.
மூலவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை ஆகிய சன்னதிகளின் விமானங்களுக்கு போத்திமார்கள், சுவாமி சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்கள், வெங்கடாஜலபதி சன்னிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார்களாலும் புனித நீர் ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடந்தது.
விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும், தை மாத முதல் முகூர்த்தம் என்பதால், நேற்று ஒரே நாளில் மட்டும் கோவிலில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.