பரந்தூர் மக்களை சந்தித்தார் த.வெ.க., தலைவர் விஜய்; வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை, த.வெ.க., தலைவர் விஜய் சந்தித்து பேசினார். கட்சிக்கொடி பொருத்திய பிரசார வாகனத்தில் பொடவூர் மண்டபம் வந்து, மக்களை விஜய் சந்தித்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக நெல்வாய் நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட, 13 கிராமங்களில் இருந்து, 5,133 ஏக்கர் நிலங்களும், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், நீர்நிலைகள், விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், தண்டலம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் போராட்டம் ஒருபக்கம் நடக்க, மறுபக்கம், நிலம் எடுப்பு உள்ளிட்ட விமான நிலையத்திற்கான அடிப்படை பணிகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏகனாபுரம் கிராமம் முழுதுமாக கையகப்படுத்தப்பட இருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்கும் அக்கிராம மக்கள், 900 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க., தலைவர் அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர், ஏகனாபுரத்தில் போராடும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரத்தில் முதல் மாநாட்டை நடத்தினார். அதில், 'பரந்துார் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
சந்திப்பு
இந்நிலையில், புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, விஜய் இன்று (ஜன.,20) பரந்துார் புறப்பட்டார். அவர் நீலாங்கரையில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். இதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அனுமதி அளித்தது.
பரந்தூரில் புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை, த.வெ.க., தலைவர் விஜய் சந்தித்து பேசினார். கட்சிக்கொடி பொருத்திய பிரசார வாகனத்தில் பொடவூர் மண்டபம் வந்து, மக்களை விஜய் சந்தித்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசார வாகனத்தில் இருந்து மக்களை நோக்கி விஜய் கை அசைத்தார்.
தொண்டர்கள் தூக்கி வீசிய, கட்சி தூண்டனை விஜய் தோளில் அணிந்து கொண்டார். கையில் த.வெ.க., கொடி, கழுத்தில் கட்சி தூண்டை அணிந்து விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர், ஏகனாபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். உங்கள் போராட்டத்துக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பின், விஜய், முதல் முறையாக மக்களை சந்திக்க, இன்று (ஜன.,20) களத்திற்கு செல்கிறார் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
போலீசார் விதித்த நிபந்தனைகள்!
* பரந்தூர் பசுமை விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். மேலும், வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும்.
* சட்டம் ஒழுங்கு நலனைப் பேண போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
* தாங்கள் பரந்தூர் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
* கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.