'மக்கள் மனங்களில் சுதேசி சிந்தனையை விதைக்கிறோம்!
சென்னை; இந்திய மக்கள் மனங்களில் சுதேசி சிந்தனையை விதைத்து, நாட்டின் போக்கில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக, 'சுதேசி ஜாக்ரன் மஞ்ச்' எனப்படும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
சுதேசி விழிப்புணர்வு இயக்கம் எப்போது, எதற்காக துவங்கப்பட்டது?
சுதேசி என்பது உள்நாட்டில் தயாராகும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்ற வணிகம், பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; சுதேசி என்பது தேசபக்தி, தற்சார்பு, கலாசாரம், வாழ்க்கை முறை சார்ந்த உணர்வு.
திலகர், வீர சாவர்க்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்கள், சுதேசி சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினர்.
சுதந்திரத்திற்கு பின், சுதேசி சிந்தனை என்பது புறந்தள்ளப்பட்டது. முழுமையான பொருளாதார சுதந்திரத்திற்கு, சுதேசியை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவதும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்று, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு உணர்ந்தது. அதற்காக, 1991 நவம்பர் 22ல் உருவான அமைப்பு தான் சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.
இயக்கம் துவங்கப்பட்ட நோக்கத்தை அடைந்துஉள்ளீர்களா?
இறுதி இலக்கு என்று எதையும் நிர்ணயித்து இயக்கம் துவக்கவில்லை. 33 ஆண்டுகளுக்கு முன், இயக்கம் துவக்கப்பட்ட காலகட்டத்தில், சுதேசி என்பதை காலத்திற்கு ஒவ்வாத பழமைவாதம் என, கிண்டல் செய்தனர். ஆனாலும், மக்கள் மனநிலையை மாற்ற இடைவிடாது களப்பணி செய்தோம். அதற்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.
சுதேசி என்பது, ஓர் மதிப்புமிக்க அடையாளமாக மாறியிருக்கிறது. கர்நாடக மாநிலம் குல்பர்காவில், சுதேசி பொருட்கள் விற்பனைக்காக, தனியாக, 'மால்' துவக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறோம்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே உள்ளங்கைக்கு வந்துவிட்ட இக்காலத்தில், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பணி என்னவாக இருக்கிறது?
தொழில்நுட்பம் இன்று பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. தொழில்நுட்பம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண, முன்னுரிமை அளித்து செயல்படுகிறோம்.
இன்று இளம் தலைமுறையினர் தொழில் நிறுவனங்களை துவங்குவது அதிகரித்துள்ளது. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. 72,000 நிறுவனங்களில் பெண்கள் பங்கெடுத்துஉள்ளனர்.
கடந்த 2022 ஜனவரி 12ல், 'தற்சார்பு பாரத இயக்கம்' என்ற பிரசார இயக்கத்தை துவக்கினோம். அதற்கு கிடைத்த வெற்றியால் தான் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேலையின்மை என்பது மிக மிக முக்கிய பிரச்னை. அதற்கு தீர்வு காண என்னவெல்லாம் செய்கிறீர்கள்; அதற்கு வெற்றி கிடைத்துள்ளதா?
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், அரசின் முயற்சி முக்கியமானது. இது தவிர, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், சமூக, கலாசார அமைப்புகளும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
பெருநகரங்களை தாண்டி, மாவட்ட அளவில் திட்டங்களை பரவலாக்குதல், உள்ளூர் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், திறன் மேம்பாடு மற்றும் சுய தொழில்களை ஊக்குவித்தல், கூட்டு முயற்சி ஆகியவை, வேலைவாய்ப்பு களை உருவாக்கும்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, தற்சார்பு பாரத இயக்கத்தை துவங்கினோம். அதற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகளுக்கு, மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?
நாங்கள், 33 ஆண்டுகளாக செயல்படுகிறோம். துவக்கத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். குழந்தை அழுகிறது என்பதற்காக, தாய் விட்டு விடுவதில்லை. அதுபோல தொடர்ந்து மக்களிடம் சென்றோம்.
இப்போது சுதேசி என்பது தேசபக்தி; நம் கலாசாரத்தை பின்பற்றும் வாழ்வியல்முறை என்பதை புரிந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் மனங்களிலும், நாட்டின் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். இது எங்களின் சாதனை.
சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து செயல்பட்ட பா.ஜ., இப்போது அதிகாரத்தில் உள்ளது. சுதேசி கொள்கையை பா.ஜ., அரசு பின்பற்றுகிறதா?
நுாறு சதவீதம் சுதேசி கொள்கையை, பா.ஜ., அரசு பின்பற்றுகிறது என்று சொல்ல மாட்டேன். முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், பா.ஜ., கூட்டணி அரசுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. சுதேசி கொள்கைக்கு பிரதமர் மோடி அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
'ஆத்மநிர்பார் பாரத், ஸ்டார்ட் அப், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா', நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பிரதமரின் கதி சக்தி திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் 'வோக்கல் பார் லோக்கல்' உள்ளிட்ட பா.ஜ., அரசின் திட்டங்கள், சுதேசியை அடிப்படை நோக்கமாக கொண்டவை தான்.
கடந்த 33 ஆண்டுகளில் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சாதனைகளாக எதை சொல்வீர்கள்?
நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இந்திய மக்கள் மனங்களில் சுதேசி சிந்தனையை விதைத்திருக்கிறோம். 1996ல், 'என்ரான்' நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு, எங்களின் தீவிர பிரசாரமும், முன்னெடுப்பும் தான் காரணம். சிகரெட் நிறுவனங்களால் பீடி தொழில் பாதிக்கப்படுவதையும், நவீன உபகரணங்களை வைத்துள்ள பெரிய மீன்பிடி நிறுவனங்களால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் தடுத்திருக்கிறோம்.
மரபணு மாற்ற விதைகள் வருவதை தடுத்திருக்கிறோம். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பால் உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்களிலும், நேரடி அன்னிய முதலீட்டை தடுத்திருக்கிறோம். இப்படி நிறைய சாதித்திருக்கிறோம்.
தமிழகத்தில் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் எப்படி இருக்கின்றன?
இயக்கம் துவங்கப்பட்டது முதல், தமிழகத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம், சிவகாசி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களிலும் தொழில் துறையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தால், நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.உள்நாட்டு பொருட்களையே வாங்குவோம், விற்போம் என்ற பிரசாரத்திற்கும், தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.