120 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க முடிவு நவரை பருவத்திற்கு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

காஞ்சிபுரம், சம்பா பருவத்தில் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, 120 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. மேலும், நவரை பருவத்திற்கு கூடுதல் கொள்முதல் நிலையங்கள் துவக்குவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

இதில், சம்பா பருவத்தில் 32,110 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும், நவரை பருவத்தில், 49,400 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியாகும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெல், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் அறுவடைக்கு வரும். நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அறுவடைக்கு வரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்பா மற்றும் நவரை பருவத்திற்கு சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக, 1 கிலோ சன்னரக நெல்லுக்கு, 23.60 ரூபாய். 1 கிலோ குண்டுரக நெல்லுக்கு, 23.10 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, 120 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்க, நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும், நவரை பருவத்திற்கு கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளன.

எந்தெந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என, வேளாண் துறையினர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகே இறுதி செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, 120 இடங்களில் மார்ச் மாதம் கொள்முதல் நிலையங்கள் துவக்க உள்ளோம். அதை தொடர்ந்து, நவரை பருவத்திற்குரிய நெல் அறுவடைக்கு தயாராகிவிடும். அப்போது, கூடுதலாக எங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை என கணக்கீடு செய்து, கூடுதல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்படும்.

- நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி,

காஞ்சிபுரம்.

Advertisement