காதல் விவகாரத்தில் மாயமாகும் காஞ்சிபுரம் இளம்பெண்கள் சமாதானம் செய்ய போலீசுக்கு தலைவலி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளில், மாயமானோர் வழக்குகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவாகிறது. ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், வாரம் இரு வழக்காவது மாயமானோர் வழக்குகள் பதிவாகின்றன.
அதில், வயது மூத்தோர், நடுத்தர வயதுடையோர், மனநிலை பாதித்தோர் என, பல தரப்பினர் மாயமாகின்றனர். அதில், இளம்பெண்கள் மாயமாகும் வழக்குகள் அதிகளவில் பதிவாகின்றன.
கடத்தல்
அவ்வாறு பதிவாகும் இளம்பெண் மாயமான வழக்குகளில், பெரும்பாலும் காதல் விவகாரம் காரணமாக காதலனுடன் சென்றது, உறவினர் வீட்டிற்கு சென்றது போன்ற காரணங்களாய் அமைவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இளம்பெண்கள் காணாமல் போய்விட்டதாக வரும் புகார்கள் முதலில் பதிவு செய்யப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் இளம்பெண் இருக்குமிடம் தெரியவந்த பின், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இதனால், இளம்பெண்கள் மாயமாகும் வழக்குகளின் எண்ணிக்கை தான் வேகமாக உயருவதாக போலீசார் புலம்புகின்றனர். உண்மையிலேயே இளம்பெண் கடத்தல் போன்ற சம்பவங்கள் 99 சதவீதம் இல்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
காதல் விவகாரங்களில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து மீட்டு, காவல் நிலையத்தில் வைத்து, காதலன் வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து வைக்கவே நேரம் சரியாக இருப்பதாக போலீசார் புலம்புகின்றனர்.
மாதந்தோறும் இதுபோன்ற வழக்குகள் ஏராளமானதாக வருகிறது என்கின்றனர். அதிலும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், இளம்பெண்களின் காதல் விவகாரங்களை சமாளிப்பதே அவர்களுக்கு சவாலாக இருக்கிறது என்கின்றனர்.
இதுகுறித்து காஞ்சி மாவட்ட போலீசார் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, அனைத்து பகுதியிலும், இளம்பெண்கள் மாயமாகும் வழக்குகளில், பெரும்பாலும் காதல் விவகாரமாக உள்ளது. ஒரு சில வழக்குகள் தான், வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்வது போன்ற சம்பவங்களாக இருக்கும்.
இளம்பெண்கள் வீட்டிலிருந்து கடை, உறவினர்கள் வீடு போன்ற இடங்களுக்கு செல்வதாக கூறி திடீரென மாயமாகி விடுக்கின்றனர். உடனடியாக பெற்றோர் கொடுக்கும் புகார்களால், இளம்பெண்கள் மாயமாகும் வழக்குகள் அதிகரிக்கிறது.
அடுத்த சில நாட்களில் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்துவிடுகிறது. இருவீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்வது தொடர்கதையாக உள்ளது.
இளம்பெண்கள் மட்டுமல்லாமல், 'டீன் ஏஜ்' சிறுமியரும் பல்வேறு காரணங்களால் மாயமாகின்றனர்.
சமூக வலைதலம்
அவர்களையும் தேடி கண்டுபிடிப்பதில் பெரும் சவாலாக உள்ளது. சமூக வலைதலங்கள் வாயிலாக பழகும் நபர்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், சிறுமியர் பலரும் அவருடன் வெளியூர்களுக்கு செல்வதால், பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு வழக்குகளை நாங்கள் சந்தித்துள்ளோம். இளம்பெண்களை விரைந்து நாங்கள் கண்டு பிடித்துவிடுவோம். ஆனால், பல வழக்குகள் ஒரே மாதிரியான சம்பவங்களாக, காதல் விவகாரமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.