பஸ் ஓட்டுனருக்கு மாரடைப்பு விபத்தில் தப்பிய பயணியர்
அடையாறு,
திருப்போரூரில் இருந்து அடையாறு, காந்திநகர் பேருந்து நிலையம் நோக்கி, தடம் எண் 102ல், மாநகர பேருந்து நேற்று காலை புறப்பட்டது. ஓட்டுநர் அன்பழகன், 49, பஸ்சை ஓட்டினார். நடத்துனராக சந்திரன் பணியில் இருந்தார். பஸ்சில் பத்துக்கும் குறைவான பயணியரே இருந்தனர்.
அடையாறு மேம்பாலம் அருகில் பேருந்து சென்றபோது, திடீரென, ஓட்டுனர் அன்பழகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை சாலையோரம் ஓரங்கட்ட நினைத்தார். ஓரமாக சென்றபோது, பாலத்தில் பஸ் மோதி நின்றது.
உடனே அங்கிருந்த போக்குவரத்து போலீசார், அன்பழகனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். பயணியருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பஸ்சின் முன் பகுதி சேதம் அடைந்தது.
இதுகுறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன், நலமாக உள்ளார் என, பணிமனை ஊழியர்கள் கூறினர்.