கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு கழிப்பறை படியாக மாதம் ரூ.300
சென்னை: கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், கழிப்பறை இல்லாத கடைகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு, கழிப்பறை படியாக மாதம் 300 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 105 விற்பனை நிலையங்களில், 30க்கும் மேற்பட்ட கடைகளில், கழிப்பறை வசதி இல்லை. இதனால், ஊழியர்கள் இயற்கை உபாதைக்கு, அருகில் உள்ள பெட்ரோல் பங்க், பேருந்து நிலையம் என, அலைய வேண்டியுள்ளது.
அங்கெல்லாம், கழிப்பறையைப் பயன்படுத்த காசு வசூலிக்கப்படுவதால், அதற்கான படியை ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை உறுதிப்படுத்திய அதிகாரிகள், கழிப்பறை இல்லாத கடைகளில், கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவதில், மெத்தனம் காட்டப்படுவதுடன், அடிப்படை சுகாதார கட்டமைப்பிலும், மெத்தனமாக இருப்பது ஏற்புடையதல்ல. துணிகள் வாங்க வருவோரும், அவசரத்திற்கு கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
கழிப்பறை இல்லாத கடைகளில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்களுக்கு, கழிப்பறை படியாக, மாதம் 300 ரூபாய் வழங்கப்படுகிறது; தற்காலிகப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம்.
வரும், 31ம் தேதிக்குள் அரசு உரிய பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.