சென்னை ஐ.ஐ.டி.,யில் தடகள வீரர்களுக்கு 'சீட்'
சென்னை: நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களில் முதல்முறையாக, சென்னை ஐ.ஐ.டி.,யில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அமலாகி உள்ளது. இந்தாண்டு தேசிய தடகள வீரர்கள் ஐந்து பேருக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு முதல், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற அல்லது பங்கேற்ற வீரர் - வீராங்கனையர் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் - வீராங்கனையருக்காக, சென்னை ஐ.ஐ.டி.,யில், ஒவ்வொரு துறையிலும் பொதுப்பிரிவில் ஒன்று, பெண்களுக்கு ஒன்று என, தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்தாண்டு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சேர்க்கையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசிய கைப்பந்து வீராங்கனை அரோஹி பாவே, பி.எஸ்., மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாட்டர் போலோ- நீச்சல் வீரர் ஆர்யமான் மண்டல் மற்றும் டில்லியைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை நந்தினி ஜெயின் ஆகியோர், பி.டெக்., கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
மேலும், டில்லியைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் பிரபாவ் குப்தா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த லான் டென்னிஸ் வீரர் வங்கலா வேதவச்சன் ரெட்டி ஆகியோர் பி.டெக்., செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.