22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை
சென்னை: டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், விவசாயிகளிடம் இருந்து, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி, 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சனிக்கிழமை திடீரென கனமழை பெய்துள்ளது.
இதனால், நெற்பயிர்கள் மழையில் நனைந்துள்ளன. வரும் நாட்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் அதிக ஈரப்பதம் இருக்கும். எனவே, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு, மத்திய அரசுக்கு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி கடிதம் எழுதியுள்ளார்.