பழநி கோயிலில் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
தேனி : பழநி முருகன் கோயிலில் மேற்பார்வையாளர் பணி வாங்கித்தருவதாக மூவரிடம் ரூ.12 லட்சம் பெற்று மோசடி செய்த தேனி மாவட்டம், வருஷநாடு மயிலாடும்பாறையை சேர்ந்த கொடியரசன் 43, மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கம்பம் சுருளிபட்டி மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி பரமசிவம் 72. இவரது பேரன் தினேஷ்குமார் 20. 2021ல் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார்.
மயிலாடும்பாறையை சேர்ந்த கொடியரசன். நண்பர் மூலம்பரமசிவத்திற்கு பழக்கமானார்.
தினேஷ்குமாருக்கு, பழநி முருகன் கோயிலில் மேற்பார்வையாளர் பணி வாங்கித் தருவதாக கூறிய கொடியரசன் அதற்கு, ரூ.5 லட்சம் பெற்றார்.அறநிலையத்துறை, வருவாய்த்துறையில் வேலை வாங்கித் தருவதாக அப்பகுதியை சேர்ந்த இருவரிடம் ரூ.7 லட்சம் என கொடியரசன் ரூ.12 லட்சம்பெற்றுள்ளார்.
மேலும் பரமசிவத்திடம் கொடியரசன் ஒரு கடிதம் தந்துள்ளார். அதில், வேலை வாங்கித் தரவில்லை எனில் பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். வேலை வாங்கித் தராமல் தொடர்ந்து ஏமாற்றினார்.
தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் பரமசிவம் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவுஇன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கொடியரசன் மீது மோசடி வழக்குப் பதிந்துள்ளனர்.