பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு; எம்.எல்.ஏ., சகோதரர் கைது
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை தகாத வார்த்தை பேசி அவரை நோக்கி செருப்பு வீசிய மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசியின் சகோதரர் ரமேஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இங்கு நேற்று மதியம் 12:15மணிக்கு நீதிபதி பாண்டிமகாராஜா வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வளாகத்தில் சுற்றித்திரிந்த நபர் ஒருவர் திடீரென நீதிபதியை பார்த்து, அவதுாறாக பேசி செருப்பை கழற்றி வீசினார்.
அந்த செருப்பு வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் விழுந்தது. போலீசார் அந்த நபரை டவுன் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில், பரமக்குடி பொன்னையாபுரம் ரமேஷ்பாபு 44, என்பதும், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏ.,வுமான தமிழரசியின் சகோதரர் என்பதும் தெரியவந்தது.
போலீசார் கூறியது: ரமேஷ்பாபுவுக்கு ராஜேஸ்வரி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் மனைவி குழந்தைகளுடன் விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ரமேஷ் பாபுவின் தந்தை ஆறுமுகம் இறந்துவிட்டார். தாயார் பார்வதி மஞ்சூர் சர்ச்சில் உள்ளார். ரமேஷ்பாபு ரோட்டிலேயே படுத்து வாழ்ந்து வருகிறார் என்றனர்.
நீதிமன்ற உதவியாளர் மாரீஸ்வரி புகாரில் ரமேஷ்பாபுவை எஸ்.ஐ., நாகசாமி கைது செய்தார்.