புகார் வாங்க மறுத்ததால் அதிருப்தி! போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த வாலிபர்

3

சென்னை: சென்னையில் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷன் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


ஆர்.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றிரவு ஒரு வாலிபர் வந்துள்ளார். கையில் அவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலையும் கொண்டு வந்ததாக தெரிகிறது. திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வாசலுக்கு வந்த அவர், பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தம் மீது ஊற்றி உள்ளார்.


பின்னர், தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டு இருக்கிறார். நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பரபரப்பான அந்த பகுதியே திடீர் களேபரமானது.


உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், தீ வைத்துக் கொண்ட வாலிபர் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயங்களுடன் கதறிய அவரை அனைவரும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.


தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதியில் விசாரணை நடத்தினர். அதில் தீக்குளித்த நபர் பெயர் ராஜன் (30) என்பது தெரிய வந்தது. மேலும் தம்மை தாக்கிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்ததும், போலீசார் மனுவை வாங்க மறுத்துவிட்டதால் இப்படி செய்துவிட்டதும் தெரிய வந்திருக்கிறது.

Advertisement