'கியூ.ஆர்., கோடு' முறையில் மார்ச் முதல் மது விற்பனை: தமிழக அரசு

3

சென்னை: 'டாஸ்மாக் கடைகளில், மார்ச் முதல், 'கியூ.ஆர்., கோடு' முறையில் மதுபானங்கள் விற்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


'டாஸ்மாக் மதுபான கடைகளில், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால், சம்பந்தப்பட்ட கடையில் பணிபுரியும், அனைத்து ஊழியர்களும் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, கடந்த அக்டோபரில், டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு, அனைத்து ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்வது சட்டவிரோதம்' என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு, 'ஊழியர்கள் கூட்டு சேர்ந்து, அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து விட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்கின்றனர்' என, அரசு மற்றும் இடையீட்டு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அப்போது, 'டாஸ்மாக் மதுபான கடையில் மது விற்பனை, வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. மார்ச் முதல் நுகர்வோர் வாங்கும் ஒவ்வோரு பாட்டிலிலும், 'கியூ.ஆர்., கோடு' ஸ்கேன் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டுமே வசூலிக்கப்படும். எனவே, கூடுதல் தொகை வசூக்கப்படுவதாக புகார் எதுவும் எழாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகத்தின் சுற்றறிக்கையை உறுதி செய்து, வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement