திண்டாட்டம்

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் இல்லாத வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. 2024 ல் ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீர் வழங்குவது என்பது திட்டத்தின் குறிக்கோள்.

குறிப்பிட்ட ஆண்டில் திட்டத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக கடமைக்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் வராமலேயே உள்ளது. குழாய்கள் பல ஊராட்சிகளில் சேதம் அடைந்துள்ளது.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 2020 முதல் 2024 வரை ஜல்ஜீவன் திட்டத்திற்காக சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி, சேதுராஜபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திப்பட்டி, கோபாலபுரம், தும்மகுண்டு, காசிலிங்காபுரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வழங்கப்படவில்லை.

ஏற்கனவே ஊராட்சிகள் மூலம் தெருக்களில் 1, 2 புது குழாய்கள் அமைத்து அதில் வாரத்திற்கு 2 முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்படும் என்று கூறி பொது அடி குழாய்களை அனைத்தையும் எடுத்து விட்டனர். தற்போது ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வராததால் மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குழாய்கள் பதித்து ஒரு ஆண்டாகியும் குடிநீர் வரவில்லை. ஒரு சில பகுதிகளில் உப்பு தண்ணீர் வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

பல கிராமங்களில் குடிநீர் வராததற்கு காரணம் ஏற்கனவே உள்ள மேல்நிலை தொட்டியுடன் கூடுதலாக ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்களை இதனுடன் இணைத்து விட்டதால், தண்ணீர் வருவது இல்லை. மேல்நிலைத் தொட்டியின் கொள்ளளவுக்கு ஏற்ப இணைப்புகள் கொடுக்காமல் கூடுதலாக கொடுத்ததால் பல வீடுகளில் தண்ணீர் வராமல் உள்ளது.

50 வீடுகளுக்கு ஒரு கேட் வால்வு என இந்த திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் திறந்து விடும் ஆப்ரேட்டர்கள் ஒவ்வொரு பகுதியாக பார்த்து தண்ணீரை திறந்து விடுவதில்லை. மொத்தமாக மேல்நிலைத் தொட்டியில் உள்ள கேட் வால்வை மட்டும் திறந்து விட்டு சென்று விடுவதால் மேடான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் குடிநீர் வருவது இல்லை.

ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு குறிப்பிட்ட ஆண்டில் முடிக்க வேண்டும் என்ற அக்கறை காட்டும் மாவட்ட நிர்வாகம் கடமைக்காக செய்த பணியால் திட்டம் முடிக்கப்பட்ட போதிலும், வீடுகளுக்கு குடிநீர் வந்து சேரவில்லை என்பதுதான் உண்மை.- -

Advertisement