ஆக்கிரமிப்பு அகற்றுவதில் விதிமுறைகள் பின்பற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் செயலர் அமுதா உறுதி
மதுரை : துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கசவன்குன்று கந்தசாமி தாக்கல் செய்த மனு:கசவன்குன்றுவில் ஊராட்சி அனுமதியுடன் குறிப்பிட்ட சர்வே எண்ணில் வீடு கட்டியுள்ளேன். அரசு புறம்போக்கு நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக எட்டயபுரம் தாசில்தார் விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பினார்.
விளக்கமளித்தேன். அதை ஏற்காமல் ஆக்கிரமிப்பை 7 நாட்களில் காலி செய்ய வேண்டும் என தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பினார்.கிராம நத்தம் நிலத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். அத்தகைய நிலத்திற்கு அரசு உரிமை கோர முடியாது. சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை.
விதிகளை பின்பற்றாமல் காலி செய்ய நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதம். நோட்டீ ைஸ ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு: ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் பெற வேண்டும். அதனடிப்படையில் பரிசீலித்து சட்ட விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதை பின்பற்றாமல் ஒரே மாதிரியாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது. அமுதா ஆஜரானார்.
அவர்,'ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் விதிமுறைகளை பின்பற்ற அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
நீதிபதிகள்: இவ்வழக்கில் வரும்காலங்களில் அமுதா ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசாரணை நாளை (ஜன.23) ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.