அமைச்சரை சந்திக்க டில்லி சென்றது '‛டங்ஸ்டன்' சுரங்க திட்ட எதிர்ப்புக்குழு
மதுரை : மதுரை மாவட்டம் மேலுார் அரிட்டாபட்டியில் 'டங்ஸ்டன்' சுரங்கத் திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்ய கோரி அப்பகுதி விவசாயிகள், பா.ஜ.கட்சியினர் நேற்று டில்லி புறப்பட்டனர். இன்று (ஜன. 22) மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டெண்டரை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கின்றனர்.
அரிட்டாபட்டி மற்றும் சுற்றுகிராமப்பகுதிகளில் டங்ஸ்டன் கனிமத்திற்கான சுரங்கம் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி டெண்டர் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுரங்கம் அமைக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி வாக்குறுதி அளித்த நிலையில், சுரங்கத் திட்டம் நடத்த அனுமதி வழங்காது என தமிழக அரசும் தெரிவித்தது. ஆனால் டெண்டர் ரத்து செய்யப்படாததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலை வாக்குறுதி
இந்நிலையில் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை ஜன.10ல் அரிட்டாபட்டி வந்து அப்பகுதி மக்களை சந்தித்தார். அ.வல்லாளப்பட்டியில் அவர் பேசும் போது 'கண்டிப்பாக சுரங்கம் வராது, போராட்டத்தை நிறுத்தி விட்டு பொங்கலை கொண்டாடுங்கள். மத்திய கனிமவள அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை வரும் போது இப்பகுதி பிரதிநிதிகளை அழைத்துச் செல்கிறேன்.
சென்னையில் வைத்து டெண்டர் ரத்து அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.
மத்திய அமைச்சர் சென்னை வர தாமதமாகும் நிலையில் பிரதிநிதிகளுடன் பா.ஜ., உறுப்பினர்களையும் டில்லிக்கு வரச் சொல்லி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அ.வல்லாளப்பட்டி ஆனந்த் கூறியது: அண்ணாமலை கூறியதன் பேரில் அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த மகாமணி, போஸ், அரிட்டாபட்டி முருகேசன், நரசிங்கம்பட்டி ஆனந்த், கிடாரிப்பட்டி முத்துவீரணன், தெற்கு தெரு சாமிக்கண்ணு, பா.ஜ., சார்பில் ராம சீனிவாசன், பாலமுருகன், ராஜசிம்மன், சுசீந்திரன் ஆகியோர் நேற்று டில்லி வந்தோம். ஜன. 22 (இன்று) அண்ணாமலை டில்லி வந்தவுடன் அவருடன் சென்று மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளோம். சந்தித்த பின் டெண்டர் ரத்து செய்வது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.