கொடைக்கானல் ஏரியிலிருந்து 5 டன் பாட்டில்கள் அகற்றம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் 5 டன் பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன என நகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: கொடைக்கானல் ஏரியை நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை.


மது, பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர கழிவுகள் ஏரியில் மிதக்கின்றன. ஹைட்ரில்லா நீர்வாழ் தாவரம் படர்ந்துள்ளது. இது பிற பாரம்பரிய தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆக்சிஜன் அளவு மற்றும் நீரின் தரத்தை குறைக்கிறது.


ஏரி அருகிலுள்ள கழிப்பறை (இ- டாய்லெட்) மோசமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குணா குகை, துாண் பாறை, பைன் வனப்பகுதியில் போதிய கழிப்பறைகள் அமைக்க வேண்டும். ஏரியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

கொடைக்கானல் நகராட்சி தரப்பு: ஏரி பகுதியில் கூடுதலாக 'இ டாய்லெட்'கள் அமைக்கும் பணி நடக்கிறது. மார்ச் இறுதி பணி நிறைவடையும். ஏற்கனவே உள்ள கழிப்பறைகள் பிப்.,15 க்குள் சீரமைக்கப்படும். குணா குகை, துாண் பாறை, பைன் வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கழிப்பறை அமைக்க வனத்துறை தான் முடிவு செய்ய வேண்டும். ஏரியை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. மார்ச் இறுதியில் பணி நிறைவடையும். ஏரியிலிருந்து 5 டன் பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள் ஏப்.,7 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement