'அதிபர் டிரம்பின் வர்த்தக முடிவுகள் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமாகும்'

1

கோவை : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப்பின் வர்த்தக கட்டுப்பாடுகள், இந்திய ஜவுளித் துறைக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு ( ஐ.டி.எப்.,) தெரிவித்துள்ளது.


டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் கனடா, மெக்சிகோவின் இறக்குமதி மீது, 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் சில நாடுகள் மீது, வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்நடவடிக்கைகள், இந்திய ஜவுளித் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.


இதுதொடர்பாக, ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, மாதம் சராசரியாக 120 முதல் 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வங்கதேசம் 3.3 பில்லியன், வியட்நாம் 3 பில்லியன், சீனா 11.5 - 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஒப்பீட்டளவில் நமது பங்களிப்பு குறைவு. எனவே, வாய்ப்புகளும் அதிகம், வளர்ச்சியும் சாத்தியமாகவே உள்ளது.
Latest Tamil News

சீனா பிளஸ் ஒன்



வங்கதேசத்தில் நிலவும் சூழல், உலக நாடுகளை 'வங்கதேசம் பிளஸ் ஒன்' என்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது. இதனால் நமக்கு பயன்தான். ஆனால், 'சீனா பிளஸ் ஒன்' என்ற சூழல்தான், நமக்கு உண்மையிலேயே பயனளிக்கும்.



ஏனெனில், வங்கதேசத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதத்தை நாம் கைப்பற்றினால், 30 கோடி அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நமக்கு கூடுதலாகும். ஆனால், இதுவே சீனாவின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் என்பது 120 பில்லியன் டாலர்கள். ஆனால், எந்தவொரு நாட்டின் சந்தைப் பங்களிப்பையும் கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல.

வாய்ப்புகள் பிரகாசம்



வங்கதேசமும் மிகச்சிறந்த போட்டித்திறன் கொண்ட நாடாக உள்ளது. அதே சமயம் உலக நாடுகள் இந்தியாவை, ஸ்திரமான நாடாகக் கருதுவதால், நமக்கான வாய்ப்புகள் பிரகாசம்.

அமெரிக்காவின் ஜவுளி இறக்குமதி ஆண்டுக்கு, 7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். இதில் 3.5 லட்சம் கோடி, பருத்தி ஜவுளிகள், 3.5 செயற்கை இழை ஜவுளிகள். இவற்றில் இந்தியாவின் சந்தை மதிப்பு பருத்தியில் 10 சதவீதமும், செயற்கை இழையில் 3.5 சதவீதமும் தான். இதில் போட்டியிட, நமது கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

கடந்த 5, 6 ஆண்டுகளாகவே, அமெரிக்க சந்தையில் சீனாவின் பங்களிப்பு, 27 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைந்துள்ளது. இதில், வியட்நாமுக்கு 2 சதவீதமும், வங்கதேசம், இந்தியாவுக்கு தலா 1 சதவீதமும் கிடைத்துள்ளது.

டிரம்ப்பின் பொறுப்பேற்பு, சீனாவுக்கான வாய்ப்புகளை மேலும் குறைக்கக் கூடும் என்பதால், இது நமக்கு சற்று சாதகமானதுதான்.

நவீன இ--காமர்ஸ் நிறுவனமான ஷீன் போன்றவை, குறைந்த அளவு பார்சல்களுக்கு வரி இல்லை என்பதை, சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. 25 முதல் 30 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை, அமெரிக்காவில் அவை வைத்துள்ளன.

இதன் மீதும், அமெரிக்காவில் அமையும் புதிய அரசு கவனம் செலுத்தலாம். சீனாவுடனான தொடர்பு நாடுகள் மீதும் கவனம் பதியலாம். வியட்நாம் வழியாக சீனா வர்த்தகம் மேற்கொள்ளும் என்பதால், வியட்நாம் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது. இது, இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என கணிக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement