திருப்பரங்குன்றம் மலையில் சமணர் குகையை ஆக்கிரமிக்க பச்சை பெயின்ட் அடித்து அட்டூழியம்
மதுரை : ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையில், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்ற சிலரை போலீசார் தடுத்தனர். தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்க தான் தடை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பொருட்படுத்தாமல், ஜன., 18ல் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலையேற முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, ஹிந்து அமைப்புகள் போராடி வரும் நிலையில், மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் பூசப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பாறையில் சில வாக்கியங்களையும் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை உதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர் அளித்த புகாரில், பொதுச்சொத்து மற்றும் தொல்லியல் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், மர்ம நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.