வணிகர்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

மதுரை: மதுரையில் உள்ள தமிழக தொழில் வர்த்தக சங்கத்தில் நூறாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. நூற்றாண்டு விழா மலரை தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:


வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் விக்ரமராஜா திராவிட மாடலின் நல்லெண்ணெ தூதுவராக செயல்படுகிறார். கருணாநிதி பிறந்த ஆண்டில் துவங்கப்பட்ட தொழில் வர்த்தக சங்கத்தின் 100 வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆட்சி வணிகர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. வணிகர்கள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குரியது. 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற பாதையில் அரசு பயணிக்கிறது.


வணிகர்களின் வளர்ச்சிக்காக அரசு எப்போதும் துணை நிற்கும். தற்போது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடம் மற்றும் மதுரை விமான நிலைய விரிவாக்கம் என்ற இரண்டு கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு உறுதியாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு சொன்னதை எல்லாம் செய்வோம். செய்வதை தான் சொல்வோம் என்றார்.

அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், பெரிய கருப்பன், தளபதி எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், சங்க செயலாளர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement