செல்போனை தராவிட்டால் கொன்றுவிடுவேன்! தலைமை ஆசிரியரை மிரட்டிய மாணவன்; கேரளாவில் அதிர்ச்சி
பாலக்காடு; செல்போனை திருப்பி தராவிட்டால் கொன்றுவிடுவேன் என்று பள்ளி தலைமை ஆசிரியரை மாணவன் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கேரளாவில் பாலக்காடு அனக்கராவில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் செல்போனை கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
பள்ளி விதித்த கட்டுப்பாட்டை மீறி 12ம் வகுப்பு மாணவன் செல்போனை பயன்படுத்தியதாக தெரிகிறது. அதைக் கண்ட வகுப்பாசிரியர் கட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
இந் நிலையில் சம்பவத்தன்று பள்ளிநேரத்தில் வகுப்பறையில் அதே மாணவன் செல்போனை மீண்டும் உபயோகப்படுத்தியதை ஆசிரியர் கண்டுள்ளார். உடனடியாக அதை பறிமுதல் செய்த அவர், நேராக தலைமை ஆசிரியரிடம் சென்று நடந்த விவரத்தை கூறி, செல்போனை ஒப்படைத்து உள்ளார்.
இதையடுத்து, நேராக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற மாணவன், அவர் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். பின்னர் செல்போனை திரும்ப தருமாறு கூறி உள்ளான். அவர் மறுக்கவே, கடுமையாக சத்தம் போட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறான்.
இந்த காட்சியை கண்டு அந்த அறையில் இருந்த ஒருவர், தமது செல்போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளார். அவரையும் மாணவன் மிரட்டிவிட்டு சென்றிருக்கிறான்.
இதை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சார்பில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.