'ஜெர்சி' புகார்: பி.சி.சி.ஐ., மறுப்பு
புதுடில்லி: ''ஐ.சி.சி., விதிமுறைப்படி, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் 'ஜெர்சி' உருவாக்கப்பட்டுள்ளது,'' என, பி.சி.சி.ஐ., செயலர் தேவாஜித் சைகியா தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி (பிப். 19--மார்ச் 9) நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளது. துவக்க விழாவில் பங்கேற்க கேப்டன் ரோகித் சர்மாவை, பாகிஸ்தான் அனுப்ப, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய அணியின் 'ஜெர்சி'யால் புதிய சர்ச்சை எழுந்தது. ஐ.சி.சி., நடத்தும் தொடர்களின் போது வீரர்கள் அணியும் 'ஜெர்சியில்' லோகோ, போட்டியை நடத்திடும் நாடுகளின் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் 'ஜெர்சி'யில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை மறுத்து, பி.சி.சி,.ஐ., செயலர் தேவாஜித் சைகியா கூறுகையில், ''சாம்பியன்ஸ் டிராபியில், ஐ.சி.சி.,யின் 'ஜெர்சி' தொடர்பான ஒவ்வொரு விதிமுறைகளையும், பி.சி.சி.ஐ., பின்பற்றும். பாகிஸ்தானில் நடக்கும் துவக்க விழா, செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை,'' என்றார்.