கரும்பை தாக்கும் இடைக்கணு புழுவால் மகசூல் பாதிப்புஒட்டுண்ணி அட்டை வைத்து கட்டுப்படுத்த யோசனை
கரும்பை தாக்கும் இடைக்கணு புழுவால் மகசூல் பாதிப்புஒட்டுண்ணி அட்டை வைத்து கட்டுப்படுத்த யோசனை
நாமக்கல், : 'கரும்பை தாக்கும் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்தி, மகசூல் இழப்பை தவிர்க்க ஒட்டுண்ணி அட்டை வாங்கி பயன்பெறலாம்' என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:உலகின் பல வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில், கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான், கரும்பு விவசாயிகளுக்கு கனிசமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க பூச்சி. இது கரும்பு தண்டுகளின் உட்புற திசுக்களை உண்ணும். மிதமான தாக்குதலின் போது, 20 சதவீதம் முதல், கடுமையான தாக்குதலின் போது, 50 சதவீதம் வரை மகசூல் இழப்புக்கு வழி வகுக்கும்.
இவை பழுப்பு நிறத்தலைகள் கொண்ட வெண்மையான புழுக்கள். இவை உடலின் முதுகு பக்கத்தில் உள்ள நீளமான கோடுகள் மற்றும் கரும்புள்ளிகளால் அடையாளம் காணப்படுகின்றன. கரும்புகளை சுற்றிலும் நீர் தேங்கியுள்ள சூழ்நிலைகள், கரும்பு இடைக்கணு துளைப்பான் உருவாக்கத்திற்கு சாதகமானது. குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம் ஆகியவை, இடைக்கணு புழுவின் எண்ணிக்கை பெருவெடிப்புக்கு சாதகமாக உள்ளது. இடைக்கணு புழு தண்டு வழியாக சுரங்கப்பாதையை உருவாக்கி, கரும்பை கிடைமட்டமாக உண்ணும் மற்றும் கரும்புகளை உடைத்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி, இலைப்புழுக்கள், காய்புழுக்கள், தண்டு துளைப்பான் போன்றவற்றின் முட்டை பருவத்தை நன்றாக அழிக்கவல்லது. இந்த ஒட்டுண்ணி, ஒரு குளவி இனத்தை சேர்ந்தது. பூச்சிகளின் முட்டைகளை துளை செய்து, அதனுள் தன்னுடைய முட்டையை வைத்து பயிரை தாக்கும் பூச்சியை, முட்டை பருவத்திலேயே அழிக்கும்.
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி அட்டையை, 2 ஏக்கர் என்ற அளவில், நான்காவது மாதம் முதல், 6 முறை, 15 நாட்கள் இடைவெளியில் வயலில் வெளியிட வேண்டும். இம்முட்டை ஒட்டுண்ணி, நாமக்கல் மாவட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஒட்டுண்ணி அட்டையை, நெல் இலைசுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், காய்கறி பயிரை தாக்கும் காய்ப்புழு மற்றும் குருத்துப்புழு பருத்தியை தாக்கும் பச்சைக்காய் புழு ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்.
கரும்பு இடைக்கணு துளைப்பாணுக்கு எதிரான இந்த ஒட்டுண்ணி அட்டையை, நாமக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள், நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்பட்டு வரும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் வாங்கி பயன்பெறலம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.