அட நம்புங்க... விளையாட்டு மைதானம் தாங்க!


அட நம்புங்க... விளையாட்டு மைதானம் தாங்க!


வீரபாண்டி,:சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில், இரு ஆண்டுகளுக்கு முன், கிராமப்புற இளைஞர்கள் பயன்பெற, ஊரக விளையாட்டு மையம் பெயரில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டன. வீரபாண்டி ஒன்றியத்துக்கு, ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி ஊராட்சி இருசனம்பட்டியில் மைதானம் உள்ளது.
அங்கு கைப்பந்து, வளையப்பந்து, இறகுப்பந்து, எறி பந்து, கபடி, கோ - கோ, கிரிக்கெட் மற்றும் உடற்பயிற்சி செய்ய, 1.65 ஏக்கரில், 2.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களுடன் கட்டி, பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் இரு மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால், மைதானத்துக்குள் புகுந்த தண்ணீர், இதுவரை வெளியேற வழியின்றி, பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. உடற்பயிற்சிக்கு பதிக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்கள், அந்த நீரில் மூழ்கி, துருப்பிடிக்கும் சூழல் உள்ளது.
இதனால் இளைஞர்கள் பயிற்சி செய்ய முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பாசி படர்ந்த நீரால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் உற்பத்தி மையமாக மாறிவிட்டது. தேங்கியுள்ள நீரை உடனே அகற்றி, முறையான வடிகால் வசதி ஏற்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement