கருக்கலைப்பு விவகாரம்: தர்மபுரி இடைத்தரகர் கைது
கருக்கலைப்பு விவகாரம்: தர்மபுரி இடைத்தரகர் கைது
ஆத்துார்: கருவில் பாலினம் கண்டறிதல், கருக்கலைப்பு செய்த விவகாரத்தில், தர்மபுரியை சேர்ந்த பெண் இடைத்தரகரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர், நேற்று முன்தினம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டம் ஆத்துாரில் ஆய்வு செய்தனர். அப்போது கர்ப்பிணிகளை வீட்டுக்கு வரவழைத்து, இயந்திரம் மூலம் பாலினம் கண்டறிதல்; மருந்து, மாத்திரையில் கருக்கலைப்பு செய்தல் பணிகளை மேற்கொண்டது தெரிந்தது. இதனால் ஆத்துாரில் சவுந்தரராஜன், வெங்கட்ராமன், கள்ளக்குறிச்சியில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இயந்திரம், மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த சத்யா என்பவரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியை சேர்ந்த, கோவிந்தன் மனைவி வனிதா, 37, இடைத்தரகராக செயல்பட்டது தெரிந்தது. நேற்று, ஆத்துார் மற்றும் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு போலீசார், வனிதாவை கைது செய்தனர்.
இதுகுறித்து இணை இயக்குனர் சாந்தி கூறியதாவது:ஆத்துார், கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட, 3 பேர், வனிதாவிடம், பாலினம் கண்டறியும் இயந்திரம், உபகரணங்கள், மருந்து, மாத்திரைகளை பெற்று வந்ததாகவும், தர்மபுரி கர்ப்பிணியரை, 10,000 முதல், 20,000 ரூபாய் வரை, 'பேரம்' பேசி, அவர் அனுப்பி வந்ததாகவும் தெரிவித்தனர். தற்போது வனிதாவை போலீசார் கைது செய்தனர். 2024ல், தொப்பூர், பரிகம் பகுதியில், கருக்கலைப்பு விவகாரத்தில் வனிதா கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன், ஜாமினில் வந்த அவர், மீண்டும் அதே தொழில் செய்துள்ளார்.
பத்தாம் வகுப்பு படித்த அவர், பியூட்டி பார்லர், டைலரிங் தொழில் செய்து வந்தார். அவரிடம் அறிமுகமான பெண்களில், தவறான உறவில் கர்ப்பமாவோரை கருக்கலைப்பு செய்ய, சேலம், ஆத்துார், கள்ளக்குறிச்சி பகுதிக்கு அனுப்பியுள்ளார். திருமணமாகி கர்ப்பமாவோருக்கு, கருவில் பெண் சிசு இருந்தால் அந்த சிசுவை மருந்து, மாத்திரை மூலம் கருக்கலைப்பு செய்தும் வந்துள்ளார். இத்தொழிலில், 10 ஆண்டுக்கு மேல் ஈடுபட்ட அவரை கைது செய்துள்ளோம். இவர், பாலினம் கண்டறியும் இயந்திரம், மருந்து, மாத்திரைகளை யாரிடம் வாங்கினார் என்ற விபரம் சேகரிக்கப்படுகிறது. இவரது வாட்ஸாப் ஆடியோக்கள், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.