கோஷ்டி தகராறில் போலீஸ்காரர் உட்பட 21 பேர் மீது வழக்கு

போடி: போடி அருகே நடந்த கோஷ்டி தகராறில் போலீஸ்காரர் உள்பட 21 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

போடி பொட்டல்களத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் 23. இவரது பெரியப்பா மகன் தமிழரசன். இவர் ஏற்கனவே திருமணம் ஆன பானுமதியுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இதற்கு வசந்தகுமார் குடும்பத்தினர் காரணம் என கருதி, பாலமுருகன் உறவினர் முத்துமுருகன், சின்ன குருவு உட்பட 10 பேர் வசந்தகுமார் வீட்டிற்குள் நுழைந்து வசந்தகுமார், அவரது அண்ணன் சதீஷ்குமார், இவரது மனைவி மவுனிகாவை அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். காயம் அடைந்த மூவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொட்டல்களத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 30, தேனி ஆயுதப்படை போலீசாராக உள்ளார். இவரது தங்கை பானுமதி திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரது அண்ணன் மகன் தமிழரசனுடன் பானுமதி 2 மாதத்திற்கு முன்பு சென்று விட்டதாக போடி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் ராமன் உறவினர் வசந்த், சதீஷ், அன்பு உட்பட 11 பேர் சேர்ந்து பாலமுருகன் உறவினர் சின்னன், சின்னராமுத்தாய், பவுன்தாய் ஆகியோரை அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயம் அடைந்த 4 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வசந்தகுமார் புகாரில் போலீஸ்காரர் பாலமுருகன், முத்துமுருகன் உட்பட 10 பேர் மீதும், பாலமுருகன் புகாரில் ராமன், வசந்த் உட்பட 11 பேர் மீதும் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement