போலீஸ் செய்திகள்...
மாணவி தற்கொலை
தேனி: பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி ரயில்வே லைன் தெரு முத்து மகள் யாழினி 17. தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றார். இதை அவரது தாய், கண்டித்துள்ளார். விரக்தியில் இருந்த மாணவி, வீட்டில் துாக்கிட்டார். அவரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
வழக்கறிஞருடன் தகராறு : ஒருவர் கைது
தேனி: போடி நகராட்சி பேட்டைத் தெரு அருண்குமார் 45. வழக்கறிஞர். இவருக்கும் தேவாரம் பொம்மி நாயக்கன்பட்டி கிழக்குத்தெரு அந்தோணிக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த அருண்குமாரை போடேந்திரபுரம் பேக்கரி கடைக்கு முன் பொது இடத்தில் ஜாதியை கூறி அவதுாறாக பேசிய அந்தோணி கொலை மிரட்டல் விடுத்தார். வழக்கறிஞர் புகாரில் வீரபாண்டி எஸ்.ஐ., அசோக், எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவில் அந்தோணியை கைது செய்தார்.
பெண் தற்கொலை
தேனி: அல்லிநகரம் சொக்கம்மன் தெரு நாகராணி 56. இவரது கணவர் எத்திராஜ் 72. கட்டட ஒப்பந்ததாரர். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.சர்க்கரை, ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த நாகராணி, அடிக்கடி, சாகப்போகிறேன் என கணவரிடம் தெரிவித்து புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் விஷம் குடித்து விட்டு விபரத்தை கணவரின் அலைபேசியில் தெரிவித்துள்ளார். அப்போது நாகராணி மயங்கிய நிலையில் இருந்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பண மோசடி: திருநங்கை மீது வழக்கு
ஆண்டிபட்டி: கோவில்பட்டியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் 41, அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடன் பழக்கம் ஏற்படுத்திய உத்தமபாளையம் சுருளிப்பட்டியை சேர்ந்த திருநங்கை பிரன்சி, படித்த ஏழை எளியவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார். தனது மகன் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும், அவருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யமாறு பாண்டியம்மாள் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை கூட்டத்தில் வேலை வாங்கி தருவதாக பிரன்சி கூறியுள்ளார். இதற்காக பாண்டியம்மாளிடம் ரூ.25 ஆயிரம், மற்றும் ரூ.60 ஆயிரம் என ரூ.85 ஆயிரம் இரு தவணைகளில் பிரின்சி பணம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி உள்ளார். க.விலக்கு போலீசார் பிரன்சி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.