விமான நிலையம் வேண்டாம்கிராம மக்கள் கோரிக்கை
விமான நிலையம் வேண்டாம்கிராம மக்கள் கோரிக்கை
ஓசூர், :ஓசூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்., மக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கொத்தகொண்டப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், ஒன்னல்வாடி பஞ்., மக்கள், ஓசூர் மாநகராட்சியுடன் தங்கள் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மனு வழங்கினர்.
அதேபோல், எஸ்.முதுகானப்பள்ளி பஞ்.,ல், 7 பஞ்., மக்கள் சேர்ந்து, இப்பகுதியில் விமான நிலையம் அமைக்க, சர்வே எடுக்கப்படுகிறது. விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டாம் எனக்கூறி, எம்.எல்.ஏ., பிரகாஷிடம் மனுக்களை
வழங்கினர்.அதை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., பிரகாஷ் பேசுகையில், ''ஓசூர் வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் தேவை. ஓசூரில் விமான நிலையம் அமைக்க, பெங்களூரு விமான நிலையம் தடையின்மை சான்று வழங்காமல் உள்ளது. தி.மு.க., அரசு எப்போதும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படாது,'' என்றார்.
அதேபோல், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது, மார்க்கெட் விலையை இழப்பீடாக மாநில அரசு வழங்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக, 7 பஞ்.,த்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் எஸ்.முதுகானப்பள்ளியில் ஒன்றாக திரண்டு, விமான நிலையம் வேண்டாம் என, கோஷங்களை எழுப்பினர்.