திட்டம் வகுத்தும் நோ யூஸ்: மழை காலங்களில் இல்லை வருமுன் காப்போம் முகாம்:சளி, காய்ச்சல்,ஆஸ்துமாவால் துயரத்தில் கிராம மக்கள்
தமிழக அரசானது கிராம மக்களின் நலன் கருதி கிராம பகுதிகளில் கட்டணம் இன்றி வருமுன் காப்போம் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள், தங்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்று பயன்பெறுகின்றனர். இந்த முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் துவக்கி விடுகின்றனர். மழை காலம் வருவதற்கு முன்பாகவே முகாம்கள் முடிந்து விடுகின்றன.
இதனால் முகாம்கள் நடந்தும் கிராமப்புற மக்கள் முழுமையான பயனடைய முடியவில்லை.
காரணம் நவம்பர் மாதத்தில் துவங்கும் மழைக்காலம் டிசம்பர், ஜனவரி முடிய உள்ளது. இந்த காலத்தில் கிராம மக்கள் காய்ச்சல் , சளியால் பாதிக்கப்படுகின்றனர். இது மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு திணறலால் மழைக்காலத்தில் அவதிப்படுகின்றனர். மழைக்காலத்தில் வைரஸ் பரவல் கூடுதலாகும் போது கிராமப்புறங்களில் சரியான மருத்துவ வசதி இல்லாததால் அரசு ,தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதை தடுக்கவும், கிராம மக்களின் நலன் கருதியும் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்களை ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.