மதுரை கோட்ட அரசு பஸ்களில் நல்ல கலெக்ஷன்: ஒரே நாளில் ரூ.4.49 கோடி வசூல்
மதுரை: பொங்கல் விடுமுறைக்கு பின் ஜன.20ம் தேதி ஒரே நாளில் மதுரை கோட்ட அரசு பஸ்கள் ரூ.4.49 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இது கடந்த பத்தாண்டுகளில் அதிக வசூல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கலையொட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பஸ்களை இயக்கினாலும், சென்னைக்கு அதிகளவில் பஸ்கள் சென்றன.
மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் இருந்து ஜன.10 முதல் 13 வரை தென் மாவட்டங்களுக்கு 467 பஸ்கள், பொங்கல் விடுமுறைக்குப் பின் ஜன.15 முதல் 20 வரை தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 605 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் சென்னையில் இருந்து 4 நாட்களில் மதுரை அரசு பஸ்களில் மட்டும் 15 ஆயிரத்து 636 பயணிகளும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 6 நாட்களில் 24 ஆயிரத்து 724 பயணிகளும் பயணித்துள்ளனர்.
இதுதவிர பொங்கல் விடுமுறை முடிந்தபின் பயணிகள் வேலைக்கு செல்வதற்காக பல்வேறு நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். இதில் ஜன.20ம் தேதி அதிகளவில் பயணித்துள்ளனர். இதன்மூலம் மதுரை கோட்டத்தில் உள்ள அரசு சிறப்பு பஸ்கள், ரெகுலர் பஸ்கள், டவுன்பஸ்கள் அனைத்து பஸ்கள் மூலமும் ஒரே நாளில் ரூ.4 கோடியே 49 லட்சத்து 24 ஆயிரம் வசூல் கிடைத்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் அதிக வசூல் என மேலாண் இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.