திமிங்கிலத்தின் ஆயுள் ஆய்வு

பூமியில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது திமிங்கிலம். இது அதிகமான ஆயுள் கொண்ட உயிரினங்களில் ஒன்று. பொதுவாக இவை 70 முதல் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, இவை 130 ஆண்டுகள் வரை வாழும் என்று தெரிவித்துள்ளது.

திமிங்கிலத்தின் இறைச்சி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெறுவதற்காக, அவற்றை வேட்டையாடுகிற போக்கு ஐரோப்பாவில் துவங்கியது. அமெரிக்காவில் 18 - 19ம் நுாற்றாண்டுகளில் இது உச்சத்தை அடைந்தது. இதனால், பல்வேறு திமிங்கில இனங்கள் அழிந்துவிட்டன. மனிதர்களின் இப்படியான தவறான செய்கையால், திமிங்கிலங்களின் ஆயுளை பற்றிய நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல் போனது.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா பல்கலை திமிங்கிலங்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 40 ஆண்டுகளாக திமிங்கிலங்கள் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களை, இது அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சதர்ன் ரைட் வேல் (Southern right whale) எனப்படுகிற ஒரு திமிங்கிலம். இது ஆஸ்திரேலியா,அன்டார்டிகா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் வாழ்கிறது.

இந்த ஆய்வின் வாயிலாக, இந்த திமிங்கிலங்கள் தங்களுடைய நடுத்தர பருவத்தையே 75ம் ஆண்டில் தான் அடைகின்றன என்று தெரிந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் பெரும்பாலான திமிங்கிலங்கள் 75 வயதை அடையும்போது இறந்து விடுகின்றன.

பத்து சதவீதம் மட்டுமே 132 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. அழிந்து வரும் இந்த உயிரினங்களை பாதுகாக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம் என்று விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.

Advertisement